General04 June 2026

ஜூலைக்குள் இலங்கையின் இறக்குமதி செலவு கணிசமாகக் குறையும் என எதிர்பார்ப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை ஸ்திரமாக இருக்கும் பட்சத்தில் அல்லது மேலும் வீழ்ச்சியடையும் பட்சத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் கணிசமாகக் குறையும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிபொருள் இறக்குமதி செலவுகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், சர்வதேச சந்தையில் நிலவிய அதிக விலை மற்றும் மின் உற்பத்திக்குத் தேவையான கூடுதல் எரிபொருள் இறக்குமதி காரணமாக, கடந்த மாதங்களில் எரிபொருளுக்கான டொலர் வெளிச்செல்லுகை கடுமையாக அதிகரித்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

வழக்கமாக எரிபொருள் இறக்குமதிக்காக மாதத்துக்கு சராசரியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த செலவினம் 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்ததுடன், இதற்கான கொடுப்பனவு மே மாதத்தில் செலுத்தப்பட்டுள்ளது.

எரிபொருள் கொள்வனவுக்காக நாட்டிலிருந்து அதிகளவிலான டொலர் வெளியேறிய மாதமாக கடந்த மாதம் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் மாதத்தில் 11 எரிபொருள் கப்பல்கள் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டதுடன், மின் உற்பத்திக்காக மட்டும் ஒரு கூடுதல் டீசல் கப்பல் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டதே இந்த செலவின அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இருப்பினும், தற்போது இந்த மாதாந்த எரிபொருள் இறக்குமதி செலவுகளைக் குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்த செலவினம், இந்த மாதத்தில் சுமார் 318 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளதாகவும், எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் இதனை மேலும் 198 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்க முடியும் என மதிப்பிட்டுள்ளதாகவும் கூறினார்.

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயல்பாடுகளுக்குத் தேவையான அனைத்து மசகு எண்ணெய் விநியோகமும் தற்போது சீராகக் கிடைத்துள்ளதே இந்த செலவு குறைப்புக்கான முக்கிய காரணமாகும்.

உலக சந்தையில் டீசல் விலை படிப்படியாகக் குறைந்து வருவதால், இலங்கையினால் எரிபொருள் இறக்குமதிச் செலவுகளை எவ்வித சிரமமுமின்றி முகாமைத்துவம் செய்ய முடியும் என தலைவர் சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், ஜூலை மாதத்துக்குப் பின்னரான நிலைமை சர்வதேச சந்தையின் போக்குகள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களைப் பொறுத்தே அமையும் என அவர் எச்சரித்துள்ளார்.

தற்போதைக்கு ஜூலை மாதம் வரை தங்களுக்கு தெளிவான திட்டம் உள்ளதாகவும், உலக சந்தையில் மீண்டும் விலை அதிகரித்தால் அல்லது மோதல்கள் தீவிரமடைந்தால், சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க நேரிடும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes