General04 June 2026

மேற்கிந்திய தீவுகளுக்கு 304 ஓட்டங்கள் வெற்றி இலக்கு: பெதும், குசல் அபார அரைச்சதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி ஜமெய்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் (Sabina Park) மைதானத்தில் இடம்பெறுகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப், முதலில் பந்துவீசுவதற்குத் தீர்மானித்தார்.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பபாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் புகுந்த கமிந்து மென்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

எனினும், இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அணியை வலுவான நிலைக்கு இட்டுச் சென்றனர்.

இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்காக 136 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். அதிரடியாக விளையாடிய குசல் மென்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பெற்ற வேளையில் மத்தியூ போர்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

மறுபுறத்தில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 103 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களம் புகுந்த பவன் ரத்நாயக்க 24 ஓட்டங்களுடனும், சரித் அசலங்க 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

ஒருகட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், இறுதி ஓவர்களில் ஜனித் லியனகே அதிரடியாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவர் 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைக் குவித்தார்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ், ரொஸ்டன் சேஸ் மற்றும் மத்தியூ போர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Related recommendation
Hiru TV News | Programmes