General04 June 2026

முதியோர் இல்ல தீ விபத்தை நேரில் கண்டவர் உருக்கம்!

வெசாக் நிலவு தோன்றி மறைவதற்கு முன்பாகவே அ்ங்குருவாதொட்ட, படகொட கல்பாத்த 'மவ்பிய செவண' முதியோர் இல்லத்திலிருந்து நெஞ்சை உலுக்கும் மரண ஓலம் கேட்டது. நேற்று (3) மாலை 5 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தே இந்த அவலத்திற்குக் காரணமாகும்.

அந்த இல்லத்தில் மனநலக் குறைபாடுகள் கொண்ட பல்வேறு வயதுடைய பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 72 பேர் இருந்தமை இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகையினரைப் பராமரிப்பதற்காக நிர்வாகத் தரப்பில் ஐந்து பேர் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களைப் பிரதேசவாசிகள், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட குழுவினர் இணைந்து மிக விரைவாக மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், 51 பேர் எவ்வித காயங்களுமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அந்த இல்லத்திற்கு முன்னாலுள்ள படகொட ஆரம்பப் பாடசாலைக் கட்டடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இராணுவப் பேருந்துகள் மூலமாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டதுடன் மேலும் ஒரு பகுதியினர் படகொட பகல்நேர பராமரிப்பு நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத, இந்த சம்பவத்தை முதன்முதலில் நேரில் கண்ட பிரதேசவாசி ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்:

"நாங்கள் இதற்கு முந்தைய நாள் இந்த இல்லத்தில் உள்ள 72 பேருக்காகத் தானம் (உணவு) கொண்டு வந்திருந்தோம். சம்பவம் நடக்கும் போது நான் இங்கு வரும் போதே தீப்பரவல் ஏற்பட்டு 5 அல்லது 10 நிமிடங்கள் கடந்திருந்தது. முன் பக்கக் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் பூட்டிடப்பட்டிருந்தன.

முன் பக்கமாக ஒருவர் தவித்துக் கொண்டு சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இந்த இல்லத்தின் தரையில் மெத்தைகளைப் போட்டே இவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் மனிதர்கள் எழுப்பிய மரண ஓலச் சத்தம் இன்னும் காதுகளில் ஒலிப்பது போலவே இருக்கின்றது.

நடக்க முடியாத மூவர் முன் பகுதியிலேயே இருந்தனர். எனது கூச்சலைக் கேட்டுச் சுற்றியிருந்தவர்களும் ஓடி வந்தனர். நாங்கள் பின்புறமாகச் சென்று மிகக் கடினமான முயற்சியின் மத்தியிலேயே ஏழு அல்லது எட்டுப் பேரைக் காப்பாற்றினோம்.

அந்த நேரத்திலும் கூட அண்மிக்க முடியாத அளவுக்குத் தீப் பிளம்புகள் எரிந்து கொண்டிருந்தன. நாங்கள் காப்பாற்றி முற்றத்துக்கு அழைத்து வந்த ஒரு தாய், 'அய்யோ எனது மாலை வீட்டிற்குள் விழுந்துவிட்டது' என்று கூறிவிட்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடினார். அவரும் அந்த மாலையின் காரணமாகத் தீயில் கருகிப் போனார். எரிவாயு கொள்கலனும் பின்னர் வெடித்திருந்தது."

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 25 வயதுடைய தனுஷ்கி சஷி என்ற யுவதியின் உறவினர் ஒருவர் பின்வருமாறு தெரிவித்தார்:

"நாங்கள் அம்பலாங்கொடைப் பகுதியைச் சேர்ந்தவர்கள். பேஸ்புக்கில் இதைப் பார்த்துவிட்டே எங்களது அக்காவின் மகளை இங்கு ஒப்படைத்தோம். அக்கா வெளிநாடு சென்றிருந்த காரணத்தினால். மாதத்துக்கு முப்பத்தையாயிரம் ரூபாய் நாங்கள் இங்கு செலுத்துகின்றோம். இதற்கு மேலதிகமாக, மருந்து எடுப்பதற்கு என்று கூறி அவர்கள் கேட்கும் நேரங்களிலெல்லாம் இருபதாயிரம், முப்பதாயிரம் என கேட்கும் தொகைகளைக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் அவரைப் பார்க்க வருவதாக இருந்தால் இவர்களுக்கு முன்கூட்டியே அறிவித்து அனுமதி பெற்றுக்கொண்டே வர வேண்டும். அப்போது நன்றாகக் குளிப்பாட்டித் தூய்மையாக வைத்திருப்பார்கள். இல்லையெனில், மற்றைய நாட்களில் எந்தவொரு தூய்மையும் இருக்காது.

சங்கிலியால் பிணைத்துக் கட்டி வைத்திருப்பார்கள். இவர்கள் செய்வது என்னவென்றால், இயலாதவர்களை ஒரு பக்கமாகப் போட்டுவிட்டு, ஓரளவிற்குப் பேசவும் நடக்கவும் கூடியவர்களை வெளியே அழைத்து வந்து காணொளி எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுப் பணம் சம்பாதிப்பதுதான்."

சம்பவம் நடக்கும் போது இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் அங்கு இருக்கவில்லை என்பதுடன், இந்த இடத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள இருமாடி வீடு ஒன்றில் அவர்கள் தங்கியிருந்ததாகப் பிரதேசவாசிகள் மிகுந்த ஆத்திரத்துடன் தெரிவிக்கின்றனர்.

இது தவிர, மருத்துவர் ஒருவர், தாதி ஒருவர், நோயாளர் காவு வண்டி உள்ளிட்ட மனநல நோயாளர்களைப் பராமரிக்கும் இவ்வாறானதொரு நிறுவனத்தை நடத்திச் செல்வதற்குத் தேவையான எந்தவொரு அடிப்படை வசதிகளும் இந்த நிறுவனத்துக்குள் இருக்கவில்லை என்றும் பிரதேசவாசிகள் கடும் கோபத்துடன் தெரிவிக்கின்றனர்.

தீ பரவிய நேரத்தில் ஹொரணை தீயணைப்புப் பிரிவின் இரண்டு வாகனங்கள் வருகை தந்து தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மீண்டும் தண்ணீர் கொண்டு வரச் சென்றமையினால் தாமதம் ஏற்பட்டதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.

இளைஞர்கள் புகைப்போக்கி மீது ஏறி, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தண்ணீர் குழாய்கள் மூலம் தீயை அணைக்க முயற்சித்துள்ளதுடன், இரவு பத்து மணி வரையுமே தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்குப் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஹொரணை மாவட்ட பொது மருத்துவமனைக்குக் காயமடைந்தவர்கள் எட்டுப் பேர் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இதுவரை அவர்களுள் இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தீக்கிரையான இல்லத்திலிருந்து பத்து உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுள் ஒன்பது பெண்களுடையது என்றும் ஒன்று ஆணுடையது என்றும் காவல்துறை தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், தீ விபத்துத் தொடர்பாகப் பரந்தளவிலான விசாரணைகளை முன்னெடுப்பதாகப் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்த இல்லத்தில் இருந்த, நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ள ஒரு முதிய பெண்மணி தனியானதொரு அறையில் தங்கவைக்கப்பட்டு, தற்போது அவரிடமிருந்து சம்பவம் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளக் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்துள்ள உறவினர்கள், தங்களது சகோதரனோ அல்லது மகளோ உயிரிழந்தாரா இல்லையா என்பதை இதுவரை திட்டவட்டமாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியாமல் போனமையினால் நிர்வாக அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹொரணை பிரதான நீதவான் லக்மினி விதானகமகே சம்பவ இடத்துக்குச் சென்று ஸ்தலப் பரிசோதனைகளை மேற்கொண்டதுடன், உடலங்களை ஹொரணை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

ஹொரணை மருத்துவமனையின் விசேட சட்ட மருத்துவ அதிகாரி சந்தகென் வடுகேவினால் சட்ட மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், பாணந்துறை வலய குற்ற விசாரண அதிகாரிகள், அரசாங்க இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினரால் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes