General12 June 2026

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு எதிராக, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இரண்டு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2014 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஏழை விவசாயிகளுக்குச் சலுகை விலையில் வழங்குவதற்காக அரசாங்கத்தின் செலவில் இறக்குமதி செய்யப்பட்ட 36,000 கிலோகிராம் சோள விதைகளை, மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து, தனது அரசியல் ஆதரவாளர்களுக்கு விநியோகித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டின் மூலம், கையூட்டல் மற்றும் ஊழல் சட்டத்தின் 70 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமான 'ஊழல்' எனும் குற்றத்தைப் புரிந்துள்ளதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

அதன்படி, அதிகார துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes