General17 June 2026

2 மாதங்களுக்குப் பின் மசகு எண்ணெய் ஏற்றுமதி ஆரம்பம்!

அமெரிக்க கடற்படையின் இரண்டு மாத கால முற்றுகையை முறியடித்து, ஈரானின் இரண்டு பிரம்மாண்ட சூப்பர்டேங்கர் (Supertanker) கப்பல்கள் வெற்றிகரமாக வெளியேறியுள்ளதாக கடல்சார் கண்காணிப்பு சேவையான 'டேங்கர்டிராக்கர்ஸ்' (TankerTrackers) தெரிவித்துள்ளது.

இதன் மூலம், கடந்த இரண்டு மாதங்களில் முதன்முறையாக ஈரான் தனது மசகு எண்ணெய் ஏற்றுமதியை மீண்டும் தொடங்கியுள்ளது.

'எக்ஸ்' (X) சமூக வலைத்தள பக்கத்தில் டேங்கர்டிராக்கர்ஸ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஜூன் 15 அன்று பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் தானியங்கி அடையாள அமைப்பு (AIS) தரவுகள் மூலம் இந்த விபரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான (NITC) 'டியோனா' (Diona) மற்றும் 'ஹிரோ 2' (Hero 2) ஆகிய இரண்டு சூப்பர்டேங்கர் கப்பல்களே இவ்வாறு அமெரிக்க கடற்படையின் முற்றுகை வளையத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளன.

இந்த இரு கப்பல்களும் கூட்டாக மொத்தம் 3.8 மில்லியன் பேரல் ஈரானிய மசகு எண்ணெயைச் சுமந்து கொண்டு வெளியேறியுள்ளதாகக் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 'ஸ்ட்ரீம்' (Stream) எனப்படும் ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் மூன்றாவது கப்பலும் தற்போது முற்றுகைக் கோட்டை நோக்கி நகர்ந்து வருவதாக டேங்கர்டிராக்கர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்த கப்பல் கடந்த 7 வாரங்களாக ஈரானுக்குள் நுழைவதற்காக பாகிஸ்தானின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் (EEZ) காத்திருந்த நிலையில், தற்போது முற்றுகை எல்லையை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes