General17 June 2026

ஆசனப்பட்டி விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் - ஜூன் 19 ஆம் திகதிக்கு பின்னர் புதிய சட்டம் அமுல்

வாகனங்களில் பயணிக்கும் போது ஆசனப்பட்டி அணிவதை கட்டாயமாக்கும் புதிய விதிமுறைகளை அமுல்படுத்துவதற்காக வழங்கப்பட்டிருந்த மூன்று மாத சலுகைக் காலம் ஜூன் 19ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஜூன் 19ஆம் திகதிக்குப் பின்னர் இந்த விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு எச்சரித்துள்ளது.

இந்த புதிய சட்ட அமுலாக்கத்திற்கு முன்னதாக, சாரதிகள் மற்றும் பயணிகளைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு வேலைத்திட்டமொன்று கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை பரிமாற்றகத்தில் (Kottawa Expressway Interchange) இன்று (17) நடத்தப்பட்டது.

இதன்போது, "உங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒரு கிளிக்" ("A Click for Your Loved Ones") என்ற கருப்பொருளின் கீழ் தயாரிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் அதிகாரிகளால் விநியோகிக்கப்பட்டதுடன், தங்களின் பாதுகாப்பிற்காக ஆசனப்பட்டிகளை அணியுமாறு வீதிப் பயனாளர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதன்படி, சாதாரண வீதிகளில் பயணிக்கும் போது வாகனத்தின் சாரதிகள் மற்றும் முன் இருக்கையில் பயணிக்கும் நபர் மாத்திரம் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாகும்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது, வாகனத்தின் சாரதி மற்றும் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் உட்பட அனைத்து பயணிகளும் ஜூன் 19 முதல் கட்டாயமாக ஆசனப்பட்டி அணிந்திருக்க வேண்டும்.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 1,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான முழுப் பொறுப்பும் வாகன சாரதிகள் , பயணிகள் மற்றும் வாகனங்களின் உரிமையாளர்களையே சாரும் என அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes