General18 June 2026

உளவுத்துறை தொடர்பில் அருட்தந்தை சிறில் காமினிக்கு என்ன தெரியும்? சுரேஷ் சலேயின் உளவுத்துறை வலையமைப்பு குறித்து உதய கம்மன்பில வெளிப்படை!

வேதாகமத்தையேனும் முறையாக அறியாத அருட்தந்தை சிறில் காமினி உளவுத்துறை செயல்பாடுகள் குறித்து முறையான புரிதல் இன்றி கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அரசியல் தேவைகளுக்காக உளவுத்துறை குறித்துப் பலர் பல்வேறு கருத்துக்களைக் கூறி வந்தாலும், அதன் உண்மையான செயல்பாடுகள் முற்றிலும் வேறுபட்டவை என அவர் சுட்டிக்காட்டினார்.

முக்கியமான உளவுத்துறை தகவல்களைப் பாதுகாப்பதற்காக, சில அதிகாரிகளின் தொலைபேசி கடவுச்சொற்களைக் கூட வழங்கக் கூடாது என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் சிலர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதற்கிடையில்,அருட்தந்தை சிறில் காமினி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, 'உளவுத் தகவல்கள் இருந்திருந்தால், அவர்கள் ஓய்வு பெறும்போது அவற்றை இராணுவத்திடம் ஒப்படைத்திருக்க வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார்.

வேதாகமம் குறித்தேனும் தெரியாத அருட்தந்தை உளவுத்துறை தகவல்குறித்து பேசுகின்றார்.

இருப்பினும், இந்த கூற்றானது உளவுத்துறையின் அடிப்படை கோட்பாடுகளுக்கே முரணானது என்றும், இது அருட்தந்தையின் அறியாமையையே வெளிப்படுத்துகிறது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஒரு உளவுத்துறை அதிகாரி சம்பந்தப்பட்ட அமைப்பிற்குள் ஊடுருவுதல், அந்த அமைப்பில் உள்ள ஒருவரைத் தகவல் வழங்குபவராக தன்வசப்படுத்துவது ஆகிய இரண்டு விடயங்கள் உலகளாவிய நடைமுறைகளின்படி, உளவுத்துறையினர் மனிதர்களைப் பயன்படுத்தி தகவல்களைச் சேகரிக்கும் இரண்டு முக்கிய முறைகளாக உள்ளன.

தங்களது உயிரைப் பணயம் வைத்துத் தகவல் வழங்கும் இத்தகைய தகவல் வழங்குநர்கள், தாங்கள் நூறு சதவீதம் நம்பும் உளவுத்துறை அதிகாரியிடம் மட்டுமே அந்த விபரங்களை வழங்குவார்கள்.

விடுதலைப்புலி அமைப்பின் இரண்டாவது தலைவராக இருந்தவர் இந்திய உளவுத்துறைக்குத் தகவல் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு பிரபாகரனால் கொல்லப்பட்டார் என்பதும், உளவுத் தகவல் வழங்குவதில் உள்ள பாரதூரமான ஆபத்துக்கு ஒரு சிறந்த உதாரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகாரிகள் ஓய்வு பெறுதலும் தகவல் வழங்குநர்களின் ரகசியத்தன்மையும் குறித்து விளக்கமளித்த உதய கம்மன்பில
ஒரு உளவுத்துறை அதிகாரி ஓய்வு பெறும்போது அல்லது இடமாற்றம் பெற்றுச் செல்லும்போது, இந்த தகவல் வழங்குநர்கள் வேறு அதிகாரிகளுக்குத் தகவல் வழங்க மறுப்பதற்கு முழு உரிமை உண்டு.

மேலும், உளவுத்துறை அதிகாரிகள் தங்களது தகவல் வழங்குநர்களின் அடையாளத்தை ஒருபோதும் உயர் அதிகாரிகளுக்கோ அல்லது பொதுவான தரவு அமைப்புகளுக்கோ (Data Banks) தெரிவிப்பதில்லை. அவ்வாறு செய்தால், ஒரேயொரு காட்டிக்கொடுப்பு மூலம் அந்த தகவல் வழங்குநர்களின் உயிரே பறிபோகும் அபாயம் உள்ளது.

முன்னாள் உளவுத்துறை தலைவர் சுரேஷ் சலே 38 வருடங்களாகக் கள அதிகாரியாகப் (Field Officer) பணியாற்றி கட்டியெழுப்பிய ஒரு பிரம்மாண்டமான உளவு வலையமைப்பு அவரிடம் உள்ளது.

அதில் உள்ள சில தகவல் வழங்குநர்கள் அவரைத் தவிர வேறு யாரையும் நம்பாத ஒரு பின்னணியில், அந்த ரகசிய விபரங்களை இராணுவத்திடமோ அல்லது உளவுத்துறை நிறுவனத்திடமோ ஒப்படைப்பது என்பது உளவுத்துறையின் இயல்பான உலகத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

உளவுத் தகவல்களைப் பெறுவதற்காக சில நேரங்களில் காதல் உறவுகள் அல்லது திருமணங்கள் கூடச் செய்யப்படும் ரகசிய உலகமொன்று உள்ளது. இது குறித்து சர்வதேச அளவில் பல புத்தகங்கள், திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால், அருட்தந்தை சிறில் காமினி போன்றவர்கள் உளவுத்துறை குறித்து எவ்வித அடிப்படையும் தெரியாமல் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது வேடிக்கையானது என உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes