General24 June 2026

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை 9 இலட்சம் ரூபாயில் தற்காலிக வீடுகள்

இயற்கை அனர்த்தங்களினால் வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள மலையக மக்களுக்கு, 10 பேர்ச்சஸ் காணியுடன், 650 சதுர அடி பரப்பளவுள்ள புதிய வீடு நிர்மாணித்துக் கொடுக்கப்படும் என அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்

மலையகப் பெருந்தோட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான லயன் அறைகளிலேயே வசிக்கின்றனர்.

ஆரம்பத்தில், இயற்கை அனர்த்தங்களினால் வீடுகள் முழுமையாக சேதமடைந்தால், அல்லது அதிக ஆபத்தான நிலையில் இருந்தால், 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

எனினும், லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கு அந்த வீட்டின் மீதோ அல்லது காணியின் மீதோ சட்டரீதியான உரிமை இல்லாத காரணத்தினால், அவர்களுக்கு இந்த இழப்பீட்டைப் பெறுவதில் சிக்கல் இருந்தது.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்ட புதிய அமைச்சரவை தீர்மானத்தின்படி, லயன் அறைகளில் வசிக்கும் மக்களுக்கு காணி உரிமை இல்லாவிட்டாலும், அவர்களுக்கு அரசாங்கத்தினால் புதிய வீடுகள் நிர்மாணித்துத் தரப்படும் என அமைச்சர் கூறினார்.

அதன்படி, லயன் அறை முழுமையாக சேதமடைந்திருந்தால், அதிக அனர்த்த ஆபத்துள்ள பகுதியில் அமைந்திருந்தால் மற்றும் அனர்த்த மேலாண்மைக் குழுவினால் அந்த லயன் அறை வசிப்பதற்கு தகுதியற்றது என அறிவிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு வீடுகள் நிர்மாணித்துக்கொடுக்கப்படும்.

இதேவேளை, முன்னர் காணி உரிமை உள்ளவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்ட பகுதியளவு சேதத்திற்கான 5 இலட்சம் முதல் 25 இலட்சம் ரூபாய் வரையான இழப்பீடு ஏப்ரல் மாத தீர்மானத்தின் படி தற்போது லயன் அறைகளில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்படவுள்ளது

வீடுகளை இழந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணித்து முடிக்கப்படும் வரை, அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு இடைக்கால வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முப்படையினரின் பங்களிப்புடன் ஒரு வீட்டிற்கு சுமார் 9 இலட்சம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் அமைக்கப்படுகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக இவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதே அரசாங்கத்தின் திட்டம் என்றும் பெருந்தோட்ட அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes