General26 June 2026

மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ வழக்கு - ஜூலை 23க்கு ஒத்திவைப்பு

கெரம் பலகை விநியோகச் சம்பவம் தொடர்பில் தண்டனை பெற்றுச் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (26) கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும், நீதிபதி விடுமுறையில் இருந்த காரணத்தினால், வழக்கு நீதிபதி உடேஷ ரணதுங்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதன்போது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிபதி, இந்த வழக்கை எதிர்வரும் ஜூலை 23ஆம் திகதி முன்னிலை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களான முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவின் கட்சி அலுவலகங்களுக்கு விநியோகிப்பதற்காக 14,000 கெரம் பலகைகள் மற்றும் 11,000 தாம் பலகைகளை முறையற்ற விதத்தில் விநியோகித்ததன் மூலம், அரசுக்கு 39 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes