General30 June 2026

"20 ரூபாய் குறைப்பால் மக்களுக்கு என்ன பயன்?" எரிபொருள் விலை குறைப்பு ஏமாற்று வேலை என விமர்சனம்!

நாட்டில் அண்மையில் அறிவிக்கப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோல் விலை குறைப்பானது பொதுமக்களுக்கு எந்தவிதமான உண்மையான நிவாரணத்தையும் வழங்காது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை வெறும் 20 ரூபாயால் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த காலங்களில் விலைகள் உயர்த்தப்பட்ட போது, தற்போதைய குறைப்பை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள், கையிருப்பில் உள்ளதால் உடனடியாக விலையைக் குறைக்க முடியாது என அரசாங்கத் தரப்பும் அமைச்சர்களும் சாக்குப்போக்கு கூறி வருகின்றனர்.

எனினும், சர்வதேச சந்தையில் குறைந்த விலைக்கு எரிபொருள் கிடைத்த காலத்தில், அதனை உள்நாட்டில் அதிக விலைக்கு விற்றது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சொற்ப விலை குறைப்பானது சந்தையில் பொருட்களின் விலைகளையோ, போக்குவரத்து கட்டணங்களையோ அல்லது மின்சாரக் கட்டணங்களையோ எந்த வகையிலும் பாதிக்காது.

இதனால் சாதாரண மக்களுக்கு எவ்வித பலனும் கிடைக்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes