General30 June 2026

காலி சிறைச்சாலையில் கைதி மரணம்: உடலில் போதைப்பொருள் இருந்தமை உறுதி

காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் திடீரென சுகயீனமடைந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கராப்பிட்டிய போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி டி.டி. சமரவீர உடனடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட குறித்த நபர் கடந்த 2025 நவம்பர் 22ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

காலி, வித்யாலோக பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதானவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் கடந்த 28 ஆம் திகதி காலை திடீர் சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனினும், அவரது சிறுநீர் மாதிரிகளைப் பரிசோதித்ததில் அதில் போதைப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் இரத்த மாதிரிகளை மேலதிக பகுப்பாய்விற்காக அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்திய மரண விசாரணை அதிகாரி, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

காலி காவல்துறையின் முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, பிரதான காவல்துறை பரிசோதகர் லலித் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில், காவல்துறை சார்ஜன்ட் சரத் இது தொடர்பான சாட்சியங்களை வழிநடத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes