General04 July 2026

இலங்கையின் வேலையின்மை விகிதம் 3.7% ஆகக் குறைவு!

இலங்கையின் வேலையின்மை விகிதம் 2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் 3.7% ஆகச் சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டின் இதே காலாண்டில் இந்த விகிதம் 3.8% ஆகக் காணப்பட்டது. அதேவேளை, நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்களிப்பு விகிதம் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 49.7% இலிருந்து 49.2% ஆகக் குறைந்துள்ளது.

இந்தக் கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மொத்த தொழிலாளர் எண்ணிக்கை 8.41 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதில் 5.40 மில்லியன் ஆண்களும், 3.01 மில்லியன் பெண்களும் அடங்குகின்றனர்.

அதேநேரம், பொருளாதார ரீதியாகச் செயலற்ற மக்கள் தொகை 8.67 மில்லியனாக உள்ளதோடு, அவர்களில் 72.2% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ஆண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 70.1% இலிருந்து 69.1% ஆகக் குறைந்துள்ள அதேவேளை, பெண்களின் பங்களிப்பு 32.0% இலிருந்து 32.5% ஆகச் சற்று அதிகரித்துள்ளது.

நாட்டில் வேலைவாய்ப்பற்றோரின் மொத்த எண்ணிக்கை 311,495 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெண்களின் வேலையின்மை விகிதம் 6.1% ஆக பதிவாகியுள்ளதுடன், இது ஆண்களின் வேலையின்மை விகிதத்தை விட (2.4%) இரண்டு மடங்குக்கும் அதிகமானதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நாட்டில் கல்வி கற்ற ஆண்களை விட, கல்வி கற்ற பெண்களே அதிகளவில் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes