General07 July 2026

இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல் - இருவர் கைது

பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட சிற்றூர்தி என்பவற்றை கியூ பிரிவு காவல்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்தனர்.

அத்துடன், கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த இருவரைக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்த 6 இரும்புக் கூடுகளிலான புறாக்களையும் கைப்பற்றிய காவல்துறையிர் அவற்றை இராமேஸ்வரம் சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

நேற்று நள்ளிரவு முதல் பாம்பன் பாலத்தில் மறைந்திருந்து கண்காணிப்பில் ஈடுபட்ட காவல்துறையினர், இன்று அதிகாலை சந்தேகத்திற்கிடமாக நின்ற சிற்றூர்தியை சோதனையிட்ட போதே இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், பந்தயப் புறாக்களைக் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகவே மதுரையிலிருந்து கொண்டு வந்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இது தொடர்பாகக் காவல்துறை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes