General07 July 2026

"அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபரீதம் ஏற்பட்டிருக்கும்"

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் இருந்த கைதிகள் பிரதான பலகையினாலான நுழைவாயிலையும் உடைத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்ற போதே அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நுழைவாயிலின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்தும் காணொளித் தொகுப்பு குறித்து விளக்கமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "சிறைச்சாலைகளின் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளின்படி இரண்டு பிரதான நுழைவாயில்கள் காணப்படுகின்றன. முதலாவதாக இரும்பினாலான நுழைவாயிலும், இரண்டாவதாக பலகையினாலான நுழைவாயிலும் அமைந்துள்ளன.

இந்த இரண்டு நுழைவாயில்களுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே உடற்பரிசோதனை மற்றும் பொதிகள் பரிசோதனைக்கான ஸ்கேனிங் இயந்திரங்கள் மற்றும் தொடர்பாடல் வலையமைப்புகள் உள்ளிட்ட பல பெறுமதிமிக்க உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தின் போது, கைதிகள் முதலாவது இரும்பு நுழைவாயிலை முழுமையாக உடைத்துக் கொண்டு, அடுத்ததாக உள்ள பலகையினாலான நுழைவாயிலை நோக்கி வந்துள்ளனர்.

அந்த பலகை நுழைவாயிலையும் உடைத்துக்கொண்டு அவர்கள் வெளியில் தப்பியிருந்தால், சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய விபரீதங்களையும் அழிவுகளையும் இந்தத் தருணத்தில் மதிப்பிடவே முடியாது.

அதிகாரிகள் தங்களது உயிரைப் பணையம் வைத்து அந்த நேரத்தில் அவ்வாறு செயற்படாமல் இருந்திருந்தால், இதைவிடப் பாரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும்.

சமூக ஊடகங்களில் பரவும் காணொளியில், அதிகாரி ஒருவர் பலகையினாலான நுழைவாயிலில் உள்ள சிறிய துவாரத்தின் ஊடாக துப்பாக்கிச் சூடு நடத்துவது மட்டுமே வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரிகிறது.

ஆனால், அதற்குள் இரும்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டு கைதிகள் பலகையினாலான நுழைவாயில் வரை வந்துவிட்டனர் என்பதே உண்மை நிலையாகும்.

மேலும், அந்த தருணத்தில் கலவரத்தைத் தணிப்பதற்காக உள்ளே சென்ற எமது சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கைதிகளுக்கு இடையே சிக்கியிருந்ததோடு, அவர்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

எனவே, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகவே அதிகாரிகள் அந்தப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியேற்பட்டது" என பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்.

Related recommendation
Hiru TV News | Programmes