General09 July 2026

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்குரிமை மற்றும் ஓய்வூதியம்: அரசாங்கம் தீவிரம்!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பான முறையான வேலைத்திட்டமொன்றை தயாரிக்கும் பணிகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று (8) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

“வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்குரிமையை வழங்குவது தொடர்பாக பொது நிர்வாக அமைச்சின் ஊடாக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இதற்கான முறையான வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதேபோல், வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்குப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலம்பெயர் தொழிலாளர்களின் பணிபுரியும் கால அளவு வெவ்வேறாக இருப்பதாலும், அதற்கேற்ப ஒரு பொதுவான சூத்திரத்தை உருவாக்குவதில் நிலவும் சிக்கல்கள் காரணமாகவும் இந்தத் திட்டம் குறித்த பணிகள் இழிபறியில் உள்ளன.

எவ்வாறாயினும், இதற்கான பணிகள் நிறைவடைந்தவுடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என்று அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகள், ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை நேரடியாக அரசாங்கத்துக்குத் தெரிவிக்கும் வகையில் 'லங்கா கனெக்ட்' (Lanka Connect) எனும் புதிய செயலி மற்றும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

உலகில் எந்த இடத்திலிருந்தும் தங்கள் கையடக்கத் தொலைபேசி ஊடாகவே இதைப் பயன்படுத்த முடியும் என்றும், இதன் ஊடாகச் சமர்ப்பிக்கப்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பொறிமுறையொன்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes