International09 July 2026

ஈரானின் தாக்குதல் தொடர்ந்தால் நிலைமை மோசமாகும் என ட்ரம்ப் எச்சரிக்கை; கடும் பதிலடி கொடுப்போம் என ஈரான் சூளுரை

ஈரான் தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால், அமெரிக்காவின் தாக்குதல்கள் "மிகவும் மோசமானதாக" இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

நேற்று ஈரான் மேற்கொண்ட கப்பல் குண்டுவீச்சுக்கு பதிலடியாகவே, இன்றைய தாக்குதல்களை தாம் மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "நேற்று ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கான பழிவாங்கல் இதுவாகும். மீண்டும் இது நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஈரானின் மீதான தாக்குதல்களின் விளைவுகளைக் காட்டும் படம் மற்றும் காணொளிகளையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே, ஈரானின் உயர்மட்டத் தலைவரின் இராணுவ ஆலோசகரான மொஹ்சென் ரெஸாயி, அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'எக்ஸ்' தளத்தில் குர்ஆன் வசனத்தைப் பதிவிட்டுள்ள அவர், "ஆக்கிரமிப்பு எதிரியும் அதன் கூட்டாளிகளும் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்" என எச்சரித்துள்ளார்.

இரு தரப்பினரும் இவ்வாறான கடும் எச்சரிக்கைகளை விடுத்துள்ளதால், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes