General28 July 2026

இந்த ஆண்டில் 10,000 இலங்கையர்களுக்கு இஸ்ரேலில் வேலைவாய்ப்பு!

இந்த ஆண்டுக்குள் 10,000 இலங்கைத் தொழிலாளர்களை இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பணியாற்றுவதற்காகச் செல்லவுள்ள 164 தொழிலாளர்களுக்குப் பயண அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை அறிவித்தார்.

இந்த வேலைவாய்ப்புத் திட்டம் முறையான மற்றும் வெளிப்படைத்தன்மையான நடைமுறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நடப்பு ஆண்டில் இதுவரை 2,500 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 6,500 தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், புதிய துறை ஒன்றில் மேலும் 1,000 பணியிடங்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 10,000 தொழிலாளர்கள் என்ற இலக்கை எட்ட முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் உத்தியோகபூர்வமாகப் பதிவுசெய்வதன் மூலம், இலங்கையர்கள் குறைந்த செலவிலும் நம்பகத்தன்மையுடனும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் வலியுறுத்தினார்.
Related recommendation
Hiru TV News | Programmes