General04 August 2026

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற அமைச்சரவை அனுமதி

ஆசிய அபிவிருத்தி வங்கியின் சாதாரண மூலதன வளங்களின் கீழ், 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்தக் கடனைப் பெறுவதற்கான கடன் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு, 2026 ஜூன் 15ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வர்த்தகம், முதலீடு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித் திட்டத்தின் முதல் உபத் திட்டம் தொடர்பான கடன் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் கடன் தொடர்பாக சட்ட மாஅதிபர் திணைக்களம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சட்டபூர்வ ஒப்புதல்களும் பெறப்பட்டுள்ளன.

இதனையடுத்து, அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் முன்வைத்துள்ள நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான யோசனைக்கு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes