General06 August 2026

கிரிக்கெட் வீரர்களின் வரி நெருக்கடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 31 இல்!

இலங்கை தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணிகளின் தலைவர்களால் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹான் டி அபேசூரிய மற்றும் நீதியரசர் கே. பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் நேற்று (5) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின் மூலம் "விளையாட்டு வீரர்கள்" சுயாதீன சேவை வழங்குநர்களாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு தனிநபர் முன்பண வருமான வரி (APIT) விதிக்கப்படாது என்றும் இதற்கு முன்னர் நீதிமன்றத்துக்கு அறியப்படுத்தப்பட்டிருந்தது.

இன்று (5) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த புதிய திருத்தத்தின் கீழ் மனுதாரர்களான விளையாட்டு வீரர்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தீர்மானத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மறுபரிசீலனை செய்யுமா என்பது குறித்து தெளிவுபடுத்துமாறு பிரதி மன்றாடியார் நாயகம் மனோஹர ஜயசிங்கவுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், இந்த புதிய திருத்தம் குறித்த விடயத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனக் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடனான ஒப்பந்தங்களின் அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் "ஊழியர்களாகவே" கருதப்படுவதால், நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இருப்பினும், ஆண்கள் கிரிக்கெட் வீரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நிஷான் சிட்னி பிரேமரத்ன, நாடாளுமன்ற ஹான்சார்ட் அறிக்கைகளை மேற்கோள் காட்டி, இத்தகைய தெளிவற்ற தன்மைகளை நிவர்த்தி செய்வதற்காகவே நாடாளுமன்றத்தால் இந்த திருத்தம் கொண்டுவரப்பட்டது எனச் சுட்டிக்காட்டினார்.

மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பாடகர்களைப் போலவே விளையாட்டு வீரர்களும் சுயாதீன சேவை வழங்குநர்களாகவே வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த நிலையை மாற்றி தனிநபர் முன்பண வருமான வரியை அறவிட உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேற்கொண்ட முயற்சி சட்டவிரோதமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வரிப் பிரச்சினையின் காரணமாக விளையாட்டு வீரர்களின் ஏழு மாத கால தொழில்முறை கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்கள் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் நீதிமன்றில் மேலும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து, அனைத்துத் தரப்பினரும் எதிர்வரும் வாரத்திற்குள் அது தொடர்பான தெளிவுபடுத்தல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க அனுமதி அளித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தது.
Related recommendation
Hiru TV News | Programmes