கிளிநொச்சி மாவட்டத்தில் பளை வனப்பகுதியில் புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே இதனைத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ, இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அது உண்மைக்குப் புறம்பானது எனத் தெரியவந்ததாகத் தெரிவித்தார்.
கிளிநொச்சி, அக்கராயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதியிலுள்ள இடமொன்றை இலக்குவைத்து இத்தகைய தகவல்கள் வெளியாகின.
குறித்த பகுதியானது 1919ஆம் ஆண்டு இலக்கம் 7064 கொண்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
குறித்த வனப்பகுதியில் 2025ஆம் ஆண்டு முதல் சட்டவிரோதமாகக் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் பதிவாகியிருந்தன. தியாகராஜா குணதீபன் என்பவரால் ஆரம்பத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பும், பின்னர் 20 ஏக்கர் நிலப்பரப்பும் ஆக்கிரமிக்கப்பட்டு, கற்றாழை மற்றும் காய்கறிச் செய்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
அத்துடன், கடந்த ஜனவரி மாதமளவில் அந்தப் பகுதியில் கட்டட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று, தற்போது 4 மாடிக் கட்டடமொன்று எழுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தக் கட்டடத்தில் சில இயந்திரங்களைப் பயன்படுத்தி, உள்ளூர் மக்களை இணைத்து ஆடைத் தொழில்நிலையமொன்றும் நடத்தப்பட்டு வந்துள்ளதுடன், அது பதிவாளர் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வனவள திணைக்களம் மற்றும் காவல்துறையினரால் குறித்த பகுதியில் பலமுறை சோதனைகள் நடத்தப்பட்டு, நில ஆக்கிரமிப்பு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தால் குறித்த சந்தேகநபர் அந்தக் காணிக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பெப்ரவரி 17ஆம் திகதி அந்தத் தடையை நீக்குமாறு அவர் நீதிமன்றைக் கோரியபோதிலும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 25ஆம் திகதிக்குத் தவணையிடப்பட்டுள்ளது.
இந்தத் தடையையும் மீறி, குறித்த நபர் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட மணலை ஏற்றிச் சென்றமை தொடர்பிலும் காவல்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதேவேளை, கடந்த ஜூலை 24ஆம் திகதி வனவள அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் தியாகராஜா குணதீபன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், குறித்த நபர் அந்த இடம் தமக்குச் சொந்தமானது எனக் கூறி சில ஆவணங்களையும் நீதிமன்றில் முன்வைத்துள்ள நிலையில், அது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் ஆடைத் தொழில் நிலைய நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, அங்கு புலிகளின் பயிற்சி முகாம் இயங்கியதாகச் சிலர் சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்பியுள்ளனர்.
இவ்வாறான வதந்திகளையும் போலிச் செய்திகளையும் சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர்களுக்கு எதிராகக் காவல்துறை மூலம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
Latest News
உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!
வங்கித்துறை கடன் வழங்கல்: மத்திய வங்கியின் புதிய ஆய்வறிக்கை!
அயோத்தி ராமர் கோவில் பிரசாதம் எனக்கூறி போலி இனிப்பு விற்பனை: அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்!
கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனை ஆடைப் பிரச்சினை: அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவித்த அமைச்சர்!
மீண்டும் இலங்கையில் வங்குரோத்தா? ரணில்- கம்மன்பில கூற்றுக்கு பதில் வழங்கியுள்ள அனில் ஜயந்த
22க்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!
22 ஆவது திருத்தம்: நீதிமன்றம் தீர்மானித்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் தயார் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்த ஆண்டின் இறுதியில்!
நாடு திரும்ப விரும்பும் ஏதிலிகள் என்ன செய்ய வேண்டும் என அரசாங்கம் விளக்கம் - சிக்கல்களை நீக்க கோருகிறார் சாணக்கியன்
இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: அடுத்த மாதம் சோதனையோட்டம் ஆரம்பம்!