International25 August 2026

ஹைட்டியில் கொடூரத் தாக்குதல் : குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹைட்டியில் தலை நகர் போர்ட்-ஓ-பிரின்ஸ்க்கு தெற்கே அமைந்துள்ள கென்ஸ்காஃப் எனும் விவசாய சமூகப் பகுதியில் வன்முறை குழு நடத்திய கொடூரத் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்த இந்த தாக்குதலின்போது, ஆயுதமேந்திய குழுவினர் வீடுகள் மற்றும் தேவாலயங்களை கொளுத்தியும், பொதுமக்களை சுட்டும் வன்முறைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தால் "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு" என அறிவிக்கப்பட்ட 'விவ் அன்சம்' என்ற வன்முறை குழுவின் கூட்டமைப்பே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தலைநகரின் 70 வீதப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்தக்குழு, தூதரகங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்கள் அமைந்துள்ள பெஷியன் வில் பகுதிக்கான பாதையைக் கொண்ட கென்ஸ்காஃப் பகுதியைக் கைப்பற்ற தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற காவல் படை வன்முறையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வரும் நிலையிலும், நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில் 3,100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக, 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்தநிலையில், ஹைட்டி நாட்டின் பிரதமர் அலுவலகம் இந்த தாக்குதலைக் கண்டித்துள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் அங்கு நிலைநிறுத்தப்பட்டு அரசு அதிகாரம் நிலைநாட்டப்படும் என உறுதி அளித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes