General25 August 2026

மத்திய கிழக்கு நிலைமை ஸ்திரமடையும் வரை QR எரிபொருள் விநியோக முறைமை தொடரும்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் உறுதியற்ற தன்மை ஆகியவை காரணமாக, நாட்டில் QR அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறைமை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நெருக்கடியும் ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையும் உலகளாவிய எரிபொருள் விலைகளிலும் விநியோகத்திலும் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கே இந்த QR முறைமை தொடர்ந்து பராமரிக்கப்படும்.

QR முறைமையின் அமுலாக்கம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புக்குப் பின்னர் எரிபொருள் நுகர்வு ஓரளவு மட்டுமே குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதற்கமைய டீசல் நுகர்வு சுமார் 10 வீதமும், பெட்ரோல் நுகர்வு சுமார் 9 வீதமுமே குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தியாவசியத் துறைகளுக்குத் தொடர்ந்து எரிபொருள் வழங்கப்படும் என்றும், உலகளாவிய எரிபொருள் சூழல் சீரடையும் வரை இந்த QR முறைமை தற்காலிகமாகத் தொடர்ந்து செயற்படும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ் மேலும் குறிப்பிட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes