General28 August 2026

22 தொடர்பில் மீண்டும் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

முன்மொழியப்பட்டுள்ள 22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு தனது எதிர்ப்பைத் மீண்டும் வலியுறுத்தியுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் , நீதித்துறை மீது பொறுப்பான முறையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கோரியுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டம் நீதித்துறையின் சுதந்திரம் குறித்து தீவிர கவலைகளை எழுப்புவதாகத் தெரிவித்துள்ள சங்கம், அதன் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சவால் விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் திருத்தம் சட்டமாக மாறினால், அதிலிருந்து பயனடையும் முதலாமவர், பிரதம நீதியரசராகவே இருப்பார் என்று சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2026 டிசம்பர் 1 ஆம் திகதியுடன் முடிவடையவிருக்கும் பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை நீடிப்பதற்காகவே இந்தத் திருத்தம் அவசரமாகக் கொண்டுவரப்படுவதாக பரவலான கருத்து நிலவுவதாகவும் சங்கம் கூறியுள்ளது.

நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போதும் சமூக ஊடகங்களிலும் தற்போதைய பிரதம நீதியரசர் உட்பட நீதித்துறை குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

பொது அதிகாரத்தைப் பயன்படுத்தும் மற்றைய நிறுவனங்களைப் போலவே நீதித்துறையும் முறையான ஆய்வு மற்றும் பொறுப்புக்கூறலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

அத்துடன், நீதிமன்றத் தீர்ப்புகள், நீதித்துறைசார் நடத்தை மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவை நியாயமான, தகவலறிந்த மற்றும் பொறுப்பான விமர்சனங்களுக்கு முறையாக உட்படுத்தப்படலாம் என்றும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

நீதித்துறை சுதந்திரம் என்பது முறையான ஆய்வு அல்லது பொறுப்புக்கூறலுக்கு எதிரான ஒரு கவசமாகக் கருதப்படக் கூடாது
மாறாக, தகராறுகள் பக்கச்சார்பின்றி தீர்மானிக்கப்படுவதையும், தனிநபர் உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பு ஒழுங்கு பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்யும் மக்களுக்கான பாதுகாப்பாக நீதித்துறை சுதந்திரம் திகழ்கிறது என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எனவே நீதித்துறையின் பங்கை மற்றும் நீதி பரிபாலன அமைப்பை மதிக்குமாறு நாட்டின் அனைத்து உறுப்புகளையும், சம்பந்தப்பட்ட தரப்பினரையும், ஊடகங்களையும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes