General28 August 2026

மனைவியின் சமூக பிறழ்வான நடத்தையை நிழற்படம் எடுப்பது தவறு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

தாய்வானில், மனைவியின் சமூக பிறழ்வான நடத்தை தொடர்பான ஆதாரத்தை ரோபோ வெற்றிடத் துப்புரவுக் கருவி மூலம் சேகரித்த கணவருக்கு, தனியுரிமையை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வீட்டில் கிடைத்த பயன்படுத்தப்பட்ட பல் துலக்கும் தூரிகை மற்றும் கண்காணிப்பு காட்சிகளில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தென்பட்டமை அவரது சந்தேகத்தை மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர், அந்த வீட்டில் இருந்த ரோபோ துப்புரவுக் கருவியை செயலி மூலம் தொலைதூரத்திலிருந்து இயக்கியுள்ளார்.

அதிலிருந்த நேரலைக் காட்சி மூலம், தனது மனைவி மற்றொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்த அவர், அந்தக் காட்சியை பதிவு செய்துள்ளார்.

பின்னர், தனது மனைவி மற்றும் குறித்த ஆணுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த கணவர், 20 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாகக் கோரியுள்ளார்.

இந்த வழக்கில், இருவரும் திருமண உறவின் எல்லையை மீறியதாக நீதிமன்றம் தீர்மானித்து, மனைவிக்கு 5 இலட்சம் தாய்வான் டொலரை இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

எனினும், மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்ததாகத் தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், கணவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிவில் வழக்கில் அந்தக் காணொளி ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், அது தனியுரிமையை மீறி பதிவு செய்யப்பட்ட செயலை நியாயப்படுத்தாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சட்டவிரோதமாக தனிப்பட்ட காட்சிகளைப் பதிவு செய்த குற்றத்திற்காக கணவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனையும், 1.5 இலட்சம் தாய்வான் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தாய்வான் சட்டத்தின்படி, மற்றொருவரின் தனிப்பட்ட அல்லது நெருக்கமான நடவடிக்கைகளை அவர்களின் அனுமதியின்றி ரகசியமாகப் பதிவு செய்வதற்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes