General07 September 2026

ஆண்டிற்கு ஒருமுறை வரும் இயற்கை அழகு: தேயிலைத் தோட்டங்களை ஆக்கிரமித்த கஹகோனா மலர்கள்!

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் நிலவிய சீரற்ற வானிலை நீங்கியுள்ள நிலையில், தற்போது 'கஹகோனா' (Kahakona) மலர்கள் பூத்து குலுங்கி மலைநாட்டுப் பகுதியை அழகோவியமாக மாற்றியுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தின் தேயிலைத் தோட்டங்கள், ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளின் இருமருங்கிலும், ஹட்டன் - பொகவந்தலாவ பகுதியிலும் உள்ள கஹகோனா மரங்களில் பெருமளவில் மலர்கள் பூத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

இலங்கையில் தேயிலை பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், தேயிலைச் செடிகளுக்கு நிழல் தருவதற்கும் மண் அரிப்பைத் தடுப்பதற்குமாக கஹகோனா மற்றும் 'மேய்மாரா' (May Mara) போன்ற மரங்கள் நடப்பட்டதாக தோட்ட அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் இந்த கஹகோனா மரங்களில் இந்த முறை அதிகளவில் மலர்கள் பூத்துள்ளன.

அந்த மலர்களின் நறுமணம் மற்றும் மகரந்தச் சேர்க்கைக்காக ஏராளமான வண்டுகளும் தேனீக்களும் அவற்றை நோக்கி வருவதாக தோட்ட அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் வீதிகளின் இருமருங்கிலும் பூத்துக் குலுங்கும் கஹகோனா மலர்கள், இந்த நாட்களில் அந்த பகுதிக்கு பேரழகையும் மனஅமைதியையும் சேர்க்கும் எழில்மிகு காட்சியாக மாறியுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes