General10 September 2026

பெருந்தோட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சாத்தியம் குறித்து ஆராய்ப்படுகிறது - பிரதமர்

தேயிலை பயிர்ச்செய்கைக்கான காணிகளைப் பகிர்ந்தளிப்பது தேயிலைப் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்பதால், பெருந்தோட்டச் சமூகத்தின் வசதிக்காக அடுக்குமாடி குடியிருப்புக்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும், இது தொடர்பில் இதுவரை இறுதி முடிவுகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (9) நடைபெற்ற அமர்வின்போது, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள காணிகள் வரையறுக்கப்பட்டவையாகவும், பல பகுதிகள் மண்சரிவு அபாயத்துக்கு உட்பட்டவையாகவும் உள்ளதால் காணிகள் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட 962 வீடுகளில், 629 வீடுகள் பயனாளிகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவற்றை வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மாவட்டச் செயலகங்கள் ஊடாக 392 பேரிடர் வீடுகள் கட்டப்பட்டு வருவதுடன், 118 வீடுகள் விரைவில் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்திய நிதியுதவியின் 10,000 வீட்டுத் திட்டத்தின் 4ஆம் கட்டத்தின் கீழ், 1,300 வீடுகளில் 522 வீடுகளின் பணிகள் நிறைவடைந்துள்ளதோடு, இந்தத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 2,529 வீடுகளைக் கட்டுவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மலையக மக்களுக்கு 10 பேர்ச் காணியுடன் கூடிய வீடொன்றை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கையாகும். அதற்கமைய, முதன்மைத் தகைமைகளைப் பூர்த்தி செய்த 2,184 பயனாளிகளுக்காக 129 தோட்டங்களில் வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 2018ஆம் ஆண்டின் 32ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட மலையக அபிவிருத்தி அதிகாரசபையை இல்லாதொழிக்க தீர்மானிக்கப்படவில்லை எனவும், இதன் திட்டங்களுக்காகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு மூலம் 2025 ஆம் ஆண்டு 42.5 மில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டு 85 மில்லியன் ரூபாவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes