General14 September 2026

அயன் பட பாணியில் போதைப்பொருளை விழுங்கி நாட்டிற்கு வந்தவர் கைது

90 கொக்கைன் போதைப்பொருள் மாத்திரைகளை விழுங்கி நாட்டிற்கு கடத்தி வர முயன்ற 43 வயதான உகாண்டா நாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ரூபா 50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியானவை என தெரிவிக்கப்படுகிறது.

உகாண்டாவைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், அந்தநாட்டின் என்டபே (Entebbe) நகரில் வைத்து இந்த கொக்கைன் மாத்திரைகளை விழுங்கிய பின், கட்டாரின் தோஹா நகருக்குப் சென்று அங்கிருந்து கட்டார் ஏர்வேஸ் எப்.ஆர்-664 (QR-664) வானூர்தி மூலம் நேற்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

வானூர்தி நிலையத்தின் முதலாவது தளத்தில் நண்பகல் வரை தங்கியிருந்த சந்தேகநபரை, சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர் தான் விழுங்கியிருந்த 90 மாத்திரைகளில் 13 கொக்கைன் மாத்திரைகளை வெளியேற்றியுள்ளார்.

இதனையடுத்து, சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வானூர்தி நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அவரது உடலுக்குள் இருப்பதாக நம்பப்படும் ஏனைய மாத்திரைகளை வெளியேற்றுவதற்காக நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes