General19 September 2026

திருகோணமலையில் மதுபானக் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் கைது!

திருகோணமலை - அநுராதபுரம் சந்தியில் அமைந்துள்ள மதுபானக் கடை ஒன்றில் இருவரால் மேற்கொள்ளப்பட்ட கொள்ளை முயற்சியை அதன் ஊழியர்கள் முறியடித்துள்ளனர்.

நேற்று (18) இரவு 9:45 அளவில் உந்துருளியில் வந்த இரு கொள்ளையர்கள், பணத்தைத் திருடித் தப்பிச் செல்ல முயன்றனர்.

இருப்பினும், ஊழியர்களின் கடும் போராட்டத்திற்குப் பின்னர் பணப் பையுடன் கொள்ளையர்களில் ஒருவரைப் பிடிக்க முற்பட்டனர்.

அந்தச் சமயத்தில், துப்பாக்கி வைத்திருந்த மற்றைய நபர் ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற போதிலும் இலக்கு தவறியது.

அதனைத் தொடர்ந்து, இரு கொள்ளையர்களும் உந்துருளியில் அனுராதபுரம் வீதி வழியாகத் தப்பிச் சென்றனர்.

எனினும், இந்த சம்பவம் குறித்து உடனடியாகச் செயற்பட்ட காவல்துறையினர், திடீர் தேடுதல் நடவடிக்கையை நடத்தி மிஹிந்துபுர பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து இரண்டு சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes