General20 September 2026

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது இந்தியா

ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மகளிர் கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில், பங்களாதேஷ் மகளிர் அணியை 114 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி எளிதாக வீழ்த்தியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம், தங்கப் பதக்கத்துக்காக நடைபெறும் இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோதும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ஓட்டங்கள் என்ற பாரிய ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்தது.

இந்திய அணி சார்பாகச் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீராங்கனை ஷபாலி வெர்மா 49 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார்.

அணித்தலைவி ஹர்மன்பிரீத் கௌர் 40 ஓட்டங்களையும், ஸ்மிருதி மந்தனா 37 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.

இந்த நிலையில், 196 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பாக திலாரா அக்தர் 27 ஓட்டங்களையும், சுல்தானா காதுன் 12 ஓட்டங்களையும் பெற்றனர். ஏனைய எந்தவொரு துடுப்பாட்ட வீராங்கனையையும் 10 ஓட்டங்களைத் தாண்ட இந்திய பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.

பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக தீப்தி சர்மா (7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்) மற்றும் நந்தனி சர்மா (25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள்) ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.

Related recommendation
Hiru TV News | Programmes