General20 September 2026

குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க வந்தடைந்தனர்

குவைத் நாட்டில் விசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த நிலையில், அந்த நாட்டு பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று (20) அதிகாலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்தனர்.

வீட்டுப் பணி உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்காக குவைத் நாட்டுக்குச் சென்ற இவர்கள், ஒப்பந்தம் செய்யப்பட்ட தொழில் நிலையங்களிலிருந்து தப்பிச் சென்று வேறு இடங்களில் சட்டவிரோதமாக தொழில் செய்து வந்தபோதே கைது செய்யப்பட்டதாக வானூர்தி நிலையத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குவைத் நகரிலிருந்து இன்று அதிகாலை 3.10 க்கு நாட்டை வந்தடைந்த ஜஸீரா (Jazeera) வானூர்தி சேவைக்குச் சொந்தமான J9-551 (JN-551) என்ற வானூர்தி மூலமே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வருகை தந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்வதற்குத் தேவையான போக்குவரத்து மற்றும் பண வசதிகளை வழங்கி, அவர்களை அனுப்பி வைக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes