General21 September 2026

உத்தேச 22வது திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும்: சஜித் பிரேமதாச அழைப்பு!

அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது என்பதற்காக மக்கள் அதனை எதிர்ப்பதைத் தவிர்க்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

குருநாகல், இப்பாகமுவ பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்த அவர், உத்தேச 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பொதுமக்களைத் திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தேச திருத்தச் சட்டம் நீதித்துறையின் சுதந்திரம், சட்டவாட்சி மற்றும் அதிகாரப் பகிர்வு ஆகியவற்றைக் குலைத்துவிடும் என்றும், நாட்டை ஒரு கட்சி ஆட்சி முறைக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "அரசாங்கத்திற்கு 159 ஆசனங்கள் இருக்கலாம், எனினும் மக்களின் பலத்தால் இந்தத் திருத்தச் சட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும்" என்றார்.

மக்களின் செல்வாக்கை இதற்கு முன்னர் நடந்த பொதுப் போராட்டங்கள் நிரூபித்துள்ளதாகவும், சர்ச்சைக்குரிய அரசாங்கத்தின் முடிவுகளுக்கு நாடாளுமன்ற எண்கள் மட்டுமே பிரதிபலனாக இருக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில் போராட்டம் ஒன்று நடத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி ஏற்கனவே அறிவித்துள்ளது.

22 ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரசார இயக்கம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்ட அவர், நாடாளுமன்ற விவாதத்துக்கு இணையாகத் திட்டமிடப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அவர் பொதுமக்களை கோரியுள்ளார்.

இதேவேளை, இந்தத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes