General21 September 2026

அனோஜனுடன் தொலைபேசியில் உரையாடிய சஜித், விடுதலை விவகாரத்தில் தலையீடு - குடும்பத்தாரையும் சந்தித்தார்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் என்ற இலங்கை இளைஞரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இன்று (21) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

சிவராசா அனோஜனின் தந்தை தம்பிராசா சிவராசா, தாய் இராசமாணிக்கம் யோகலட்சுமி மற்றும் சகோதரன் சிவராசா ஹம்சிதன் உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

குடும்பத்தினருடனான கலந்துரையாடலின் போது, சவூதிக்கான இலங்கை தூதுவர் அமீர் அஜ்வாட்டை தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்ட சஜித் பிரேமதாச, அனோஜனின் விடுதலை தொடர்பில் ஒரு நாடாக எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துக் கலந்தாலோசித்தார்.

மேலும், தற்போது சவூதி சிறைச்சாலையில் இருக்கும் சிவராசா அனோஜனுடன் தொலைபேசியில் நேரில் உரையாடிய எதிர்க்கட்சித் தலைவர், அவரது நிலைமை குறித்து விசாரித்தறிந்ததுடன், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜாவைத் தொடர்புகொண்டு அனோஜனின் விடுதலைக்காக அரசாங்கம் தற்போது எடுத்துள்ள சட்ட நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

வெளிநாட்டில் வசித்துவரும் தாய்நாட்டிற்காக உழைத்த இலங்கையரான சிவராசா அனோஜனின் விடுதலைக்காகச் சாத்தியமான உச்சக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும், சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்துக்கு இந்தப் பிரச்சினையைத் தொடர்ச்சியாகக் கொண்டுசென்று அவரைக் காப்பாற்றத் தேவையான அனைத்து ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது உறுதியளித்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes