General23 September 2026

வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! இலங்கைக்கு பாதிப்பா?

மேல் மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மேல் – வடமேல் திசையில் நகர்ந்து, இன்று இரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏற்படாது.

எனினும், அந்த அமைப்பை நோக்கி காற்று வீசுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்த பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes