General24 September 2026

அனோஜனின் உயிரைக் காக்க மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் பூரண ஆதரவு!

சமூக ஊடகப் பதிவு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் நேற்று (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் இந்த நடவடிக்கைக்காக விசேட இராஜதந்திரத் தூதுவர்களாக செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின் தலையீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைக்காக இருவரும் அரசாங்க நிதியைப் பயன்படுத்தாமல் தங்களது சொந்த செலவில் பயணங்களை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பதற்கான கோரிக்கையுடன் இருவரையும் சவூதி அரேபியாவுக்கு அனுப்ப அரசாங்கம் கடந்த செவ்வாய்கிழமையன்று (22) தீர்மானித்திருந்தது. இதுதொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக, சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா மற்றும் உபுல் குமரப்பெரும ஆகியோர் நேற்று மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத்தை சந்தித்து, அனோஜன் சிவராசா தொடர்பான கோரிக்கை குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, அனோஜனின் சமூக ஊடகப் பதிவு இஸ்லாமிய சமூகத்திற்கு பாரதூரமானதாக இருந்ததாகத் தாம் கருதுவதாக தெரிவித்த முகமது நஷீத், அதேவேளை மனிதநேய அடிப்படையில் அவரது உயிரைக் காப்பதற்கான முயற்சிகளுக்கு தம்மால் இயன்ற ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவில் இடம்பெற்ற சந்திப்பு பயனுள்ளதாக அமைந்ததாகவும், அடுத்த கட்டமாக சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும தெரிவித்துள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes