General24 September 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் ஒன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

பயங்கரவாதச் செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கிய இந்த சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, பயங்கரவாதச் செயலில் அல்லது அதனுடன் தொடர்புடைய பிற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படும் நபர்களை அடையாளம் காணுதல், கைது செய்தல், சிறையில் அடைத்தல், தடுப்புக் காவலில் வைத்தல், விசாரணை செய்தல், வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான சட்ட ஏற்பாடுகள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன.

மக்கள் அல்லது ஒரு குழுவினரிடையே பயங்கரவாத அச்சுறுத்தல் அல்லது சூழ்நிலையை ஏற்படுத்துதல், அரசாங்கம் அல்லது சர்வதேச அமைப்பொன்றை குறிப்பிட்ட நடவடிக்கையை மேற்கொள்ளவோ அல்லது தவிர்க்கவோ சட்டவிரோதமாக நிர்ப்பந்தித்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் பயங்கரவாதக் குற்றங்களாக சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அத்துடன், அரசியல் அல்லது கருத்தியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயற்பாடுகளும் பயங்கரவாதக் குற்றங்களின் வரையறைக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கான தண்டனைகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சட்ட நடைமுறைகள் குறித்த ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes