இலங்கையின் பசுமை வலு சக்தித் துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடனான நேற்றைய சந்திப்பின் போது, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun) இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்கு, இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வலு சக்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், பசுமை வலு சக்தி, பசுமை போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் கூறியுள்ளார்.
இதனிடையே, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.









