அவுஸ்திரேலிய இராணுவத்துக்கு எதிராக பெண் ஊழியர்கள் நால்வர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம், துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு காட்டுதல் உள்ளிட்ட குற்றசாட்டுகளை முன்வைத்து அவர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (24) பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படைக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை வலுச்சேர்க்கும் வகையில் மேலும் பல பெண் ஊழியர்கள் வழக்குத் தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கபடுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனிடையே, இராணுவத்தில் பாலியல் வன்முறைக்கு இடமில்லை என அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு மே 25 ஆம் திகதி வரை பணியாற்றிய அனைத்து பெண்களும் இந்த வழக்கில் சேர தகுதியுடையவர்கள் என சட்ட நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
ஆண்களின் அளவுக்குப் பெண்கள் வலிமையுடையவர்கள் அல்ல என்பதால் ஆண்களைப் போலப் பெண்கள் ஊதியம் பெறக்கூடாது என உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டதாக வழக்குப் பதிவு செய்த ஊழியர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், பயிற்சிகளின் போது ஆபாசமான கருத்துகளுக்கும் தேவையற்ற தொடுதலுக்கும் ஆளானதாக அவர்கள் கூறுகின்றனர்.








