2025 லங்கா பிரீமியர் லீக் இந்த ஆண்டு நடைபெறாது

Wednesday, 22 October 2025 - 16:58

2025+%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81
2025 ஆம் ஆண்டு திட்டமிட்டபடி லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகள் இந்த ஆண்டு நடைபெறாது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் இந்தியாவுடன் இணைந்து இலங்கை நடத்தவுள்ள ஆடவர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண தொடரை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து மைதானங்களும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரங்களைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வதற்காகவும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தைக் கவனமாகக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வழிகாட்டுதல்களின்படி, 20 அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடரின் அனைத்து மைதானங்களும் உலகக் கிண்ண தொடர் அளவு மற்றும் தேவைகளைக் கையாளும் வகையில் சரியான நிலையில் இருக்க வேண்டும்.

இதன் விளைவாக, நாட்டின் கிரிக்கெட் வசதிகளைத் தயாரிப்பதிலும் மேம்படுத்துவதிலும் வளங்களையும் கவனத்தையும் செலுத்த அனுமதிக்கும் வகையில், லங்கா ப்ரீமியர் லீக் 2025ஐ மிகவும் பொருத்தமான கால அவகாசத்திற்கு மாற்றியமைக்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் முடிவு செய்துள்ளது.

தொடர்ந்து நடைபெற்று வரும் புனரமைப்புத் திட்டத்தில், முக்கிய சர்வதேச மைதானங்களில் உள்ள பார்வையாளர் அரங்கு வசதிகள், வீரர்கள் வசதிகள், பயிற்சிப் பகுதிகள், ஒளிபரப்பு உள்கட்டமைப்பு, ஊடக மையங்கள் மற்றும் பிற அத்தியாவசிய வசதிகளின் மேம்பாடுகள் அடங்குகின்றன.