அவுஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரின் நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில், மன்னாரில் கைது செய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களை, மன்னார் நீதிமன்றில் பிரசன்னப்படுத்திய போது, அவர்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
குறித்த இருவரும் 180 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட முதலீட்டாளரால், மன்னார், நானாட்டான், புதுக்குடியிருப்பு மற்றும் ஓமந்தை ஆகிய பகுதிகளில், பல வணிகங்களை ஆரம்பிப்பதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவருக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியே மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும், இந்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர் ஒருவரும் அவரது மனைவியும் தற்போது தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.









