விண்ணில் நிகழும் வியப்பூட்டும் வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் இன்று (12) புதன்கிழமை நிகழவுள்ளது.
2026ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணமான இது, இந்திய நேரப்படி இன்று இரவு 9.04 மணியளவில் ஆரம்பித்து, 13ஆம் திகதி அதிகாலை 1.37 மணிவரை சுமார் நான்கரை மணி நேரம் நீடிக்கவுள்ளது.
இதன் முழுமையான மறைப்பு இலங்கை நேரப்படி இரவு 11.13 மணி முதல் நள்ளிரவு 12.03 மணிவரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வானியல் நிகழ்வை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அவதானிக்க முடியும் என்றாலும், இலங்கை மற்றும் இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் முழு சூரிய கிரகணத்தைக் காண முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகணம் நிகழும் நேரத்தில் இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரமாக இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.
இலங்கை நேரப்படி சுமார் இரவு 11.16 மணியளவில் கிரகணத்தின் முக்கிய கட்டம் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 121 ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்பெயினில் முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
1905ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக ஸ்பெயினில் தென்படவுள்ள இந்த முழு சூரிய கிரகணத்தை, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்த்துக்கல்லின் சில பகுதிகளிலிருந்தும் காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு நேர்கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி முழுமையாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
முழு சூரிய கிரகணத்தின் போது பகல் நேரத்திலேயே வானம் இருண்டு, மாலை நேரம் போன்ற சூழல் உருவாகும். அதேவேளை, சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான ‘கரோனா’ மட்டும் பிரகாசமான வெண்வட்டம் போன்று காட்சியளிக்கும்.
இது முழு சூரிய கிரகணத்தின் முக்கியமானதும் அரியதுமான காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
மேலும், சூரிய கிரகணத்தின் போது கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் இயல்பான நடத்தைகளிலும் தற்காலிக மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









