General30 January 2026

மோல்டோவா வேலைவாய்ப்பு மோசடி: பொதுமக்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அவசர எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் ஊடாக வீடியோக்களை வெளியிட்டு, மோல்டோவா நாட்டில் வேலை பெற்றுத்தருவதாகக் கூறி முன்னெடுக்கப்படும் பாரிய மனிதக் கடத்தல் மற்றும் பண மோசடி குறித்துப் பல புகார்கள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 
 
வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தனது தனிப்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலம் போலியான வாக்குறுதிகளை வழங்கி இலங்கையர்களிடமிருந்து பெருமளவு பணத்தைப் பெற்றுள்ளார். குறித்த நபருக்கு எதிராகப் பணியகம் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. 
 
இவ்வாறான மோசடிகளுக்குப் பலியானவர்கள் இருப்பின், உடனடியாக பணியகத்தில் முறைப்பாடு செய்யுமாறு கோரப்பட்டுள்ளனர். 
 
அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவுறுத்தலின்படி, இவ்வாறான மனிதக் கடத்தல்காரர்களைக் கண்டறிய பணியகத்தில் விசேட பொலிஸ் பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளதுடன், அதற்குப் பெருமளவிலான முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. 
 
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின்படி, வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்களைச் சேர்த்தல், விளம்பரம் செய்தல், பணம் சேகரித்தல் அல்லது கடவுச்சீட்டுகளைப் பெறுதல் போன்றவற்றுக்கு முறையான உரிமம் பெறுவது கட்டாயமாகும். உரிமமின்றி இச்செயற்படுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். 
 
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி பண மோசடி செய்யும் போக்கு அதிகரித்துள்ளதாகப் பணியகம் அவதானித்துள்ளது. 
 
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற விரும்புவோர், பணியகத்தின் அனுமதி பெற்ற முகவர் நிலையங்களைத் தவிர வேறு எந்தவொரு இடைத்தரகர்களிடமும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Related Recomands
Hiru TV News | Programmes