General11 June 2026

பெசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் கொடுத்த 'அதிர்ச்சி' வைத்தியம்!

சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்சவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை ஒன்றைப் பெற வேண்டுமாயின், அதற்குரிய சத்தியக்கடதாசியை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன நேற்று (10) அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று (10) நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்கு நீதவான் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துக்கு ஒதுக்கப்பட்டிருந்த 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, அதன் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தாது, ஊவா மாகாண சபை தேர்தலுக்காக 12,000 ரி-சேர்ட்டுகளை பெற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு நட்டமேற்படுத்தியமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, வழக்கின் முதலாவது சந்தேகபரான முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுக்கு அறிவித்தல் ஒன்றை விடுக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

எனினும், ஆரம்பத்திலேயே இவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் அறிவித்தல் விடுக்க வேண்டிய அவசியமில்லை என நீதவான் சுட்டிக்காட்டினார். மாறாக, தேவையெனின் சர்வதேச பிடியாணையைப் பெற்றுக்கொள்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் என்பவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நேற்று (10) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வழக்கின் இரண்டாவது சந்தேகபரான அந்த பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஸ்வர் குணவர்தன என்பவரை தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கு நீதவான் அனுமதித்தார்.

இந்த சந்தேகநபர்களுக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
Related recommendation
Hiru TV News | Programmes