General13 June 2026

களனிமுல்லையில் திருடப்பட்ட கொள்கலன் பாரவூர்தி அம்புல்கமவில் மீட்பு!

முல்லேரியா - களனிமுல்லை பகுதியில் கொள்கலன் பாரவூர்தி திருடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

கடந்த ஜூன் 08 ஆம் திகதி கொள்கலனுடன் கூடிய பாரவூர்தி ஒன்று காணாமல் போயுள்ளதாக முல்லேரியா காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

ஜல்தர பகுதியைச் சேர்ந்த அமல் அத்தநாயக்க என்பவருக்குச் சொந்தமான பாரவூர்தி ஒன்றே திருடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருடப்பட்ட பாரவூர்தி , வாகன தரிப்பிட வளாகத்திலிருந்து ரணால, அம்புல்கம பகுதி வரை செலுத்தப்பட்டு, அங்குள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போது மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பாரவூர்தி மீட்கப்படும் போது, அதிலிருந்த மேலதிக சக்கரம் மற்றும் சில உதிரிப்பாகங்கள் கழற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுரேஷ் அல்லது "ரணாலே சொப்பே" என அழைக்கப்படும் நபரே இந்தத் திருட்டைப் புரிந்துள்ளார் எனவும், இவர் சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த வாகன தரிப்பிட வளாகத்தில் பணிபுரிந்தவர் எனவும் குறிப்பிடப்படுகிறது.

சந்தேகநபர் கடுமையான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என்பதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது சந்தேகநபர் அந்த பகுதியிலிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை முல்லேரியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes