General24 June 2026

பொலன்னறுவையில் 50 ஏக்கர் காடு அழிப்பு; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளனர்

பொலன்னறுவை கிரிதலே பகுதியில் சூரிய சக்தி திட்டத்திற்காக 50 ஏக்கருக்கும் அதிகமான சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க காடுகள் சட்டவிரோதமாக அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த காடழிப்பிற்கு வசதி செய்து கொடுப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

"ஊழலை ஒழிப்பதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினர்கள், இந்த சட்டவிரோத நில ஆக்கிரமிப்பிற்குப் பின்னால் இருந்து செயல்பட்டுள்ளனர்" என சாமர சம்பத் குற்றம் சாட்டினார்.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அக் கட்சியின் அரசியல்வாதிகள் இரகசியமாக கையூட்டு பெற்றுக்கொண்டு, அதிகாரிகளை மிரட்டி இந்த அழிவிற்குத் துணை நின்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுற்றாடல் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் இது குறித்து உடனடியாகத் தலையிட்டு, பொலன்னறுவையில் அழிக்கப்பட்ட காடுகள் மற்றும் அதற்குப் பின்னால் உள்ள ஊழல்கள் குறித்து விரிவான உத்தியோகபூர்வ விசாரணைகளை நடத்த வேண்டும் என சாமர சம்பத் தசநாயக்க நாடாளுமன்றத்தில் கோரிக்கையொன்றையும் முன்வைத்தார்.
Related recommendation
Hiru TV News | Programmes