Entertainment08 August 2026

‘விஸ்வநாத் & சன்ஸ்’ கதை சொல்லுவது என்ன? – ரசிகர்களின் கவனம் சூர்யா மீது!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 14ஆம் திகதி உலகளவில் வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் மமிதா பைஜூ, ராதிகா, ரவீணா டாண்டன், சுனில், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, திரைப்படத்தின் கதைக்களம் தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

முன்னோட்டத்தில், 40 வயதைக் கடந்தும் தனது கனவுகளைத் தொடர்ந்து பயணிக்கும் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீரரான சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருப்பது காட்டப்பட்டுள்ளது.

சஞ்சய் விஸ்வநாத் தனது குழந்தையைத் தனியாக வளர்த்து வரும் தந்தையாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அவரது தாயாராக நடிகை ராதிகா நடித்துள்ளார்.

குழந்தைக்கு ஏற்படும் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கில், மமிதா பைஜூவின் கதாபாத்திரம் சஞ்சயின் வாழ்க்கைக்குள் வருவது போன்ற காட்சிகளும் முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. பின்னர், இருவருக்கும் இடையில் உருவாகும் உறவை மையமாகக் கொண்டு கதை நகர்வதாக முன்னோட்டம் மூலம் தெரியவருகிறது.

இதனிடையே, கோயம்புத்தூரில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழாவில், திரைப்படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களம் மற்றும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அம்சங்கள் குறித்து படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்தை ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்குகிறது.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சுதந்திர தின வார இறுதியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.
Related recommendation
Hiru TV News | Programmes