Sports05 July 2026

கால்பந்து தொடரிலிருந்து கனடாவின் வெளியேற்றம்- தந்த அதிர்வலைகள்

கால்பந்து தொடரின் Round of 16 சுற்றுப் போட்டியில் மொரோக்கோவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் கனடா தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பில், சனிக்கிழமை காலை விக்டோரியாவின் மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கனேடிய ரசிகர்களுக்கு இந்தத் தோல்வி ஏமாற்றத்தை அளித்துள்ளது.

டவுன்டவுன் விக்டோரியா பிசினஸ் எசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்த பொது நேரடி ஒளிபரப்பு நிகழ்விற்காக, கனேடிய தேசிய அணியின் சிவப்பு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிந்தவாறு ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

போட்டியின் ஆரம்பத்தில் கனடாவுக்குக் கிடைத்த வாய்ப்புகளின் போது உற்சாகமடைந்த ரசிகர்கள், மொரோக்கோ அணியின் ஆதிக்கம் அதிகரித்ததை அடுத்து சோகமடைந்தனர்.

தோல்வி குறித்துப் பேசிய உள்ளூர்வாசியான கீசா முன்ட்ல், இந்த முடிவு வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டார்.

எனினும், கனடா அணி கால்பந்துக் கிண்ணத் தொடரில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்து ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தொடரின் எஞ்சிய போட்டிகளில் தான் மெக்சிகோ அணிக்கு ஆதரவளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

போட்டியைக் காண வந்திருந்த மெக்சிகோ அணியின் ஆதரவாளரான கிறிஸ்டியன் அசாகுரா, கனடா கால்பந்தில் தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும்,2030 கால்பந்துக்கிண்ணத்தை நோக்கி அவர்கள் பயணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

போட்டி முடிவடைந்த பின்னரும் மார்க்கெட் சதுக்கத்தில் தங்கியிருந்த ரசிகர்கள், கனடா அணியின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டி வாழ்த்தினர்.

இந்த தொடரின் மூலம் கனடா அணி தனது முதலாவது கோல், முதலாவது வெற்றி மற்றும் முதலாவது முறையாக அடுத்த சுற்றுக்கான தகுதி ஆகிய மைல்கற்களை எட்டியுள்ளது.

அத்துடன் இந்த தோல்வியின் மத்தியிலும், விக்டோரியா பிராந்தியத்தில் கால்பந்து விளையாட்டிற்கான ஆர்வம் அதிகரித்து வருவதை ரசிகர்களின் இந்த ஒன்று கூடல் வெளிப்படுத்தியுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes