General30 January 2026

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : தேரர்களின் ரிட் மனு மீதான தீர்ப்பு அடுத்த மாதம் வரை ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
 
மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
இன்றைய தினம் குறித்த தீர்ப்பு அறிவிக்கப்படவிருந்த போதிலும், தீர்ப்புரை இன்னும் முழுமையாகத் தயாராகவில்லை என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் அறிவித்தார். 
 
இதற்கமைய, தீர்ப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி அறிவிக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. 
 
எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக தீர்ப்பு தயாராகும் பட்சத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 02) அதனை அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக நீதியரசர் தெரிவித்தார். 
 
திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியது தொடர்பான சர்ச்சையையடுத்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டில் இந்தத் தேரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Recomands
Hiru TV News | Programmes