General30 January 2026

2024 சாதாரண தரப் பரீட்சையில் தமிழ் மாணவர்களின் உரிமை மீறல் : மனித உரிமைகள் ஆணைக்குழு அதிரடித் தீர்ப்பு

2024ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, 14 தமிழ் மொழிமூல மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாகத் தீர்ப்பளித்துள்ளது. 
 
2024ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி மினுவாங்கொடை அல்- அமான் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் புவியியல் பரீட்சைக்குத் தோற்றிய 14 மாணவர்களுக்கு, புவியியல் பகுதி ஒன்று வினாத்தாள் மற்றும் அதற்குத் தேவையான வரைபடங்கள் வழங்கப்படவில்லை. 
 
இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் முறையிட்டிருந்தார். 
 
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய, பரீட்சை மேற்பார்வையாளர் R.K.P.V.S. அல்போன்சோ வினாத்தாள் பொதிகளைச் சரியாகச் சரிபார்க்கத் தவறியதுடன், கவனக்குறைவாகச் செயற்பட்டமையும் தெரியவந்துள்ளது. 
 
அத்துடன், மேற்பார்வையாளர் அல்போன்சோவுக்குத் தமிழ் பேசவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள "சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சமமான பாதுகாப்பு" என்ற அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
 
எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வினாத்தாள் கிடைக்காததால் இழந்த 50 புள்ளிகளுக்குப் பதிலாக, மாணவர்கள் புவியியல் பகுதி இரண்டில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் புள்ளிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன், சம்பந்தப்பட்ட மேற்பார்வையாளர் இனிவரும் காலங்களில் பரீட்சை மேற்பார்வை பணிகளில் ஈடுபடுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
எதிர்காலத்தில் பரீட்சை மேற்பார்வைக்கு நியமிக்கப்படுவார்கள், மாணவர்கள் பேசும் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பதை உறுதி செய்ய ஒரு முறையான பொறிமுறையை பரீட்சைத் திணைக்களம் உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க மாணவர்களுக்கான அறிவுறுத்தல் ஆவணங்கள் மாணவர்களின் தாய்மொழிகளிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஆகியோர் இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது குறித்த முழுமையான அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.
Related Recomands
Hiru TV News | Programmes