General30 April 2026

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய ஒழுங்கு விதிகள்!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு (NCPA) கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளில் இரண்டாவது அதிகபட்சமாக உடல் ரீதியான தண்டனைகள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

ஆண்டுதோறும் 2,000 முதல் 2,500 வரையிலான உடல் தண்டனை சம்பவங்கள் பதிவாகின்றன.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வந்த போதிலும், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் உடல் தண்டனையானது ஒழுக்கத்தை நிலைநாட்டும் முறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உடல் மற்றும் உளவியல் ரீதியான தண்டனைகள் குழந்தையின் ஆளுமை வளர்ச்சிக்கும் நல்வாழ்வுக்கும் நீண்டகால மற்றும் குறுகியகால பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் 11 ஆவது பிரிவு, சித்திரவதை மற்றும் கொடுமையான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சிகிச்சைக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்குகிறது.

தண்டனைச் சட்டக் கோவையின் (Penal Code) பிரிவு 308(A) மற்றும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கைகள் (12/2016 மற்றும் 11/2026) கல்விச் சூழலில் சிறுவர்களுக்கு எதிரான உடல் அல்லது மனரீதியான வன்முறைகளைத் தடை செய்கின்றன.

2024 பொகோடா மாநாட்டில் உறுதியளித்தபடி, நேர்மறையான ஒழுக்க முறைகளை (Positive discipline) மேம்படுத்தவும், வன்முறையற்ற சூழலை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஏப்ரல் 30 ஆம் திகதி அனுசரிக்கப்படும் உடல் தண்டனையை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, சிறுவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிசெய்யும் வகையில் உடல் தண்டனைகளை முற்றாகக் கைவிட்டு, நேர்மறையான ஒழுங்குமுறை அணுகுமுறைகளைப் பின்பற்றுமாறு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.



Related recommendation
Hiru TV News | Programmes