International01 May 2026

அமெரிக்க விசா வேண்டுமா? – இனி 'நோ' (No) என்று சொன்னால் தான் அனுமதி!

அமெரிக்காவிற்கு விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், இனி தங்கள் சொந்த நாடுகளில் தங்களுக்கு எந்தவித அச்சுறுத்தலோ அல்லது துன்புறுத்தலோ இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற புதிய விதியை ட்ரம்ப் நிர்வாகம் அமுல்படுத்தியுள்ளது.

ஏதிலிகள் தஞ்சம் கோருவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறை, அனைத்து அமெரிக்கத் தூதரகங்களுக்கும் மற்றும் தூதரக அலுவலகங்களுக்கும் ஒரு இராஜதந்திர செய்தி மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் தற்காலிகத் தொழிலாளர்கள் போன்ற புலம்பெயராத விசா (Nonimmigrant visas) கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறை பொருந்தும்.

இதன்படி, விசா நேர்காணலின் போது விண்ணப்பதாரர்களிடம் இரண்டு முக்கியமான கேள்விகள் கேட்கப்படும்: "உங்கள் தேசத்தில் நீங்கள் ஏதேனும் பாதிப்பையோ அல்லது தவறான நடத்தையையோ எதிர்கொண்டீர்களா?" மற்றும் "உங்கள் நாட்டிற்குத் திரும்பும்போது ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சுகிறீர்களா?" என்பதே அந்த கேள்விகளாகும்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் விண்ணப்பதாரர்கள் வாய்மொழியாக "இல்லை" (No) என்று பதிலளித்தால் மட்டுமே அவர்களுக்கு விசா வழங்கப்படும் என்று அந்த வழிகாட்டல் உத்தரவிட்டுள்ளது.

விசா பெற்று அமெரிக்காவிற்குள் நுழைந்த பிறகு தஞ்சம் கோருபவர்களை முன்கூட்டியே தடுத்து, குடியேற்ற முறைமை தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

அமெரிக்க விசா அதிகாரிகள் தேசிய பாதுகாப்பின் முதல் வரிசைப் பாதுகாப்பு வீரர்கள் என்றும், ஒவ்வொரு விண்ணப்பதாரரும் அமெரிக்க சட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ளார்களா என்பதைத் தீர்மானிக்கக் கிடைக்கும் அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான சோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய பாதுகாப்பு வழிகாட்டல்களின்படி குடியேற்ற விண்ணப்பங்கள் மீதான முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தப் புதிய நடைமுறை மக்களைப் பாதுகாப்பற்ற பாதைகளைத் தேடிச் செல்லத் தூண்டும் என்றும், இது விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பைப் பெரிதும் பாதிக்கும் என்றும் குடியேற்றக் கொள்கை ஆலோசகர்கள் கவலை தெரிவித்துள்ளனர் என CNN செய்தி வெளியிட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes